வணிகம்

கரோனா வைரஸ் பீதி; பங்குச்சந்தைகள் கடும் சரிவு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இன்று பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு காணப்படுகிறது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்ப தெரியத் தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் கோவிட்-19 வைரஸ்காய்ச்சல் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

வெவ்வேறு மாநிலங்களிலும் ஒரு சிலர் கரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இன்று மேலும் ஒரு குழந்தைக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலி இன்று பங்குச்சந்தைகளில் கடும் சரிவு காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 35950 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் 434 புள்ளிகள் சரிந்து 10550 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

SCROLL FOR NEXT