யெஸ் வங்கி மோசடியில் சிக்கி கைதாகியுள்ள அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷிணி கபூர் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு செல்ல முயன்ற நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
யெஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இல்லை என்ற சந்தேகத்தின் பேரில் பல வங்கிகள் கடன் அளிக்க முன்வராத நிறுவனங்களுக்கும் யெஸ் வங்கி கடன் அளித்து வராக்கடன் அதிகரித்தது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.
வாராக்கடன் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது.
இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வோர்லியில் உள்ள இல்லமான சாமுத்திரா மஹாலில் வெள்ளிக்கிழமை இரவு முதல் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில் கைது செய்தனர்.விசாரணையில் ராணா கபூர் நிர்வாகத்தின்கீழ் வங்கி இருந்தபோது தகுதியில்லாத பல பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வழங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
அதற்குப் பிரதிபலனாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன மேலும், ராணா கபூரின் மனைவி பிந்து, மகள்கள் ராகி கபூர் டான்டன், ரோஷிணி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும் இந்த சட்டவிரோத பரிவர்த்தனையில் பங்கு இருப்பதாக அமலாக்கப்பிரிவினர் சந்தேகப்படுகின்றனர்.
குறிப்பாக டிஎச்எப்எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி பணம் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட ராணா கபூர் இன்று பிற்பகலில் மும்பை விடுமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அவரை அமலாக்கப்பிரிவினர் 11ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இந்தநிலையில், யெஸ் வங்கி மோசடியில் சிக்கி கைதாகியுள்ள அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷிணி கபூர் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு தப்பிச் செல்ல மும்பை விமான நிலையம் வந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்த நிலையில் மும்பை போலீஸார் விரைந்து சென்று விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்தினர்.
அவர் விரைவில் அமலாக்கப்பிரிவு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார் எனத் தெரிகிறது.