வங்கிகள் தொடர்ந்து திவலாகி மக்கள் பணம் பறிபோகும் சூழல் ஏற்படும் நிலையில் அதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காதது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யெஸ் வங்கி தற்போது கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10,000 கோடியாக குறைத்தது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.
தற்போது எஸ்பிஐ மற்றும் எல்ஐசி கூட்டமைப்பு யெஸ்வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும். மேலும் யெஸ் வங்கியை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் எடுத்து வருகின்றன.
அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யெஸ் வங்கி வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘வங்கிகளை ஒழங்குபடுத்தும் நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதையே யெஸ் வங்கி திவால் நிகழ்வு காட்டுகிறது. ஆச்சரியமாக உள்ளது. இது தொடருமா அல்லது இதே வழியில் தொடருமா என்பது தெரியவில்லை. மத்திய அரசு இன்னும் அமைதியாக உள்ளது. யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களின் பணமே இன்னமும் திரும்ப வரவில்லை’’ எனக் கூறினார்.