வணிகம்

ஏப்ரல் 1-ல் வங்கி இணைப்பு- நிர்மலா சீதாராமன் உறுதி

செய்திப்பிரிவு

பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 1-ல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இணைப்புச் செயல்பாட்டுக்காக 2020 ஏப்ரல் 1 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஐ நெருங்க சில வாரங்களே உள்ள நிலையில், அறிவித்தபடி இணைப்பு மேற்கொள்ளப்படுமா என்று சந்தேகம் எழுந்தது. தற்போதைய நிலையில் வங்கி இணைப்பு சாத்தியமில்லை என்று சில வங்கி அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி வங்கிகள் இணைக்கப்படும் என்று சீதாராமன் தெரிவித்தார்.

ஏர் இந்தியாவில் என்ஆர்ஐ முதலீடு: ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் 49 சதவீதம் அளவில் மட்டுமே பங்குகளைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு பெரும் முயற்சி செய்துவருகிறது. அதன் பகுதியாகவே தற்போது என்ஆர்ஐ-களுக்கு 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT