வணிகம்

உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத் துறை ரூ.32,000 கோடி வசூல்

செய்திப்பிரிவு

வருமானப் பகிர்வு தொகை தொடர்பாகக் கடந்த பிப்வரி மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.32,000 கோடி தொலைத் தொடர்பு துறைக்குச் செலுத்தியுள்ளன. இதில் ரூ.26,000 கோடி அளவில் ஏஜிஆர் நிலுவையாகவும், ரூ.6,046 கோடி அலைக்கற்றைக்கான தொகையாகவும் செலுத்தப்பட்டுள்ளன.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன்வருவாய் அடிப்படையில் அரசுக்குக் குறிப்பிட்டத் தொகையைச் செலுத்த வேண்டும். அந்தவகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்குச் செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் 24-ம் தேதிஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்நிறுவனங்கள் இந்த காலகெடுவுக்குள் நிலுவையை செலுத்த தவறின. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம்உச்ச நீதிமன்றம் ஏஜிஆர் தொகையைச் செலுத்தாத நிறு வனங்களையும், அவற்றின் மீது நடவடிக்கைதொலைத் தொடர்புத் துறையையும் கடுமையாகச் சாடியது.

அதைத் தொடர்ந்து அன்று இரவே நிலுவைத் தொகை மொத்தத்தையும் செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்புத் துறைஉத்தரவிட்டது. அதன்பிறகு நிறுவனங்கள் சுயமதிப்பீடு செய்து தொகையைச் செலுத்த வேண்டும் என்று கோரின. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம், அதன் ஆவணங்களின் அடிப்படையில் சுயமதிப்பீடு செய்து ஏஜிஆர் தொடர்பாக மொத்தமாக செலுத்த வேண்டிய தொகைரூ.13,004 கோடி மட்டுமே என்றும், அத்தொகை செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தது. ஏஜிஆர் நிலுவையாக இதுவரை வோடஃபோன் ஐடியா ரூ.3,500 கோடியும், டாடா நிறுவனம் ரூ.2,000 கோடியும் செலுத்தியுள்ளன.

இதுதவிர, 2014-ல் வாங்கிய அலைக்கற்றைக்கென ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் ரூ.6,046 கோடியைச் சில தினங்களுக்கு முன்பு செலுத்தின.அந்த வகையில் மொத்தமாக தொலைத் தொடர்புத் துறைக்கு கடந்த ஒரு மாதத்துக்குள் மட்டும்ரூ.32,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்குத் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மார்ச் 17-ல்வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT