வணிகம்

11 பேமெண்ட் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

செய்திப்பிரிவு

தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 11 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சன்பார்பா தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த பிப்ரவரி இறுதியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி கெடு முடிந்தது. அதன் பிறகு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ரிசர்வ் ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டது.

இந்த ஒப்புதல் என்பது கொள்கை அளவிலான ஒப்புதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இதற்கான முறையான உரிமம் வழங்கப்படும். இந்த அனுமதி கொடுக்கப்பட்ட அனுபவத்தை வைத்து வருங்காலத்தில் தொடர்ந்து அனுமதி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு முறை தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த முறை அந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.

பேமெண்ட் வங்கிகள், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு மூலம் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட்கள் வசூலிக்கலாம். டெபிட் கார்ட் வழங்கலாம். இண்டர்நெட் பேங்கிங் வசதி அளிக்கலாம். ஆனால் கிரெடிட் கார்ட் வழங்கவோ அல்லது கடன் வழங்கவோ முடியாது. அதேபோல வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இதில் கணக்கு தொடங்க முடியாது.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினரான நசிகேத் மோர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது.

SCROLL FOR NEXT