வணிகம்

தொடர் சரிவில் பங்குச் சந்தை- 7 நாள் வர்த்தகத்தில் ரூ.13 லட்சம் கோடி நஷ்டம்

செய்திப்பிரிவு

பங்குச் சந்தை கடந்த ஒரு வாரமாகச் சரிவைச் சந்தித்துவருகிறது. நேற்றைய வர்த்தகத்திலும் 153 புள்ளிகள் சரிவைக் கண்டது. கடந்த7 நாள் வர்த்தகத்தில் ஒட்டுமொத்தமாக 939 புள்ளிகள் சரிந்தன. இதனால் பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சரிவால் உருவான நஷ்டம் ரூ.13 லட்சம் கோடியாகும்.

இந்தியாவில் 3பேருக்கு கோவிட்19 (கரோனா வைரஸ்) நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட சூழலில் பங்குச் சந்தை சரிவு தவிர்க்க முடியாததாகிவருகிறது.

தலைநகர் டெல்லி, தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவருக்கு கோவிட் 19 தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று வர்த்தகம் தொடங்கும் போது 785 புள்ளிகள் வரை உயர்ந்து குறியீட்டெண் 39,083 புள்ளிகளைத் தொட்டது. பிற நாடுகளின் வங்கிகளில் வட்டிக் குறைப்பு நடவடிக்கையால் பங்குச் சந்தை ஏற்றம் பெறுவதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், வைரஸ் தாக்குதல் குறித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 0.40 சதவீதம் அதாவது 153 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 38,144 புள்ளிகளானது. தேசியப் பங்குச் சந்தை 0.62 சதவீதம் அதாவது 69 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 11,132 புள்ளிகளானது.

மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்ததும் பங்குச் சந்தை சரிவு மேலும் தொடர காரணமானது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் மூன்று நிறுவனங்களில் 2 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

எண்ணெய், எரிவாயு நிறுவனப் பங்குகள் 2.05 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

வர்த்தக தொடக்கத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 3 சதவீதம்வரை ஏற்றம் பெற்றன. ஆனால், பங்கு விற்பனை பிற்பகலில் அதிகரித்ததால் ஒரு சதவீதஅளவுக்கு சரிவு தவிர்க்க முடியாமல் போனது.

பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் (எஸ்பிஐ) 5.1 சதவீத அளவுக்கு சரிந்தன. இருப்பினும் எஸ்பிஐ கார்டு மற்றும் பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் பொதுப்பங்குகளில் 39 சதவீத அளவுக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் முறையே 2.24 சதவீதம் மற்றும் 1.26 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.04 சதவீத அளவுக்கு சரிந்தன. டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகள் 4.55 சதவீத அளவுக்குச் சரிந்தன.

விமான துறையைப் பொறுத்தமட்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் 8.88 சதவீதம் அளவுக்கும், இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனப் பங்குகள் 4.37 சதவீதம் அளவுக்கும் சரிந்தன. கரோனா வைரஸ்பாதிப்பு காரணமாக வெளிநாடுகளுக்கான சேவையை இவை ரத்து செய்யக்கூடும் என்ற அச்சம்காரணமாக விமான நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

SCROLL FOR NEXT