வணிகம்

பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 1150 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

கோவிட் 19 (கரோனா வைரஸ்) பாதிப்பு பல நாடுகளிலும் தெரிவதாக தகவல்கள் வெளியானதன் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவை சந்தித்தன.

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்19 பிற நாடுகளுக்கும் பரவி வருவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து பல நாடுகளின் பங்குச் சந்தைகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாயின.

சர்வதேச பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. ஷாங்காய், டோக்கியோ, சியோல்,ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன.மும்பை பங்குச் சந்தை தொடர்ந்து நான்கு நாட்களாக கடுமையான சரிவை எதிர்கொண்டது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் பீதி காரணமாக ரத்து செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அந்நாட்டு பங்குச் சந்தை 1.1 சதவீத அளவுக்கு பாதிக்கப்பட்டது. இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவு காணப்பட்டது.

மும்பை பங்கச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1150 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவு கண்டது. 38660 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 330 புள்ளிகள் சரிவடைந்து 11300 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ், எச்டிஎப்சி, இன்போசிஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்தன.

SCROLL FOR NEXT