பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப் பெருமளவு மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ்மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே நிறுவன மோசடிகளை விசாரிக்கும் அதிகாரிகள் (ஐஎஃப்ஐஓ) நீரவ் மோடி வீட்டிலிருந்து பறிமுதல் செய்த பொருட்களை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். பிரபல ஓவியர்எம்எஃப் ஹூசைனின் ஓவியம், ரவிவர்மா ஓவியம் மற்றும் விலைஉயர்ந்த கைக்கடிகாரங்கள், கைப்பைகள், சொகுசு கார்கள் உள்ளிட்ட 112 பொருட்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலம் மூலம் ரூ.50 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை சாஃப்ரான் ஆர்ட் ஏல நிறுவனம் நடத்த உள்ளது.
இது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. நேர்முக ஏலம் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது.ஆன்லைன் மூலமான ஏலம் மார்ச் 3மற்றும் 4-ம் தேதி நடைபெறும். மார்ச் மாதம் நடைபெற உள்ள மின்னணு ஏலத்தில் எம்எஃப் ஹூசைனின் ஓவியமான ``பேட்டில் ஆஃப் கங்கா யமுனா’’ இடம்பெற உள்ளது.
நேர்முக ஏலத்தில் 40 பொருட்கள் இடம்பெறுகின்றன. இதில் 15 கலை படைப்புகளாகும். இதில் முக்கிய ஓவியமான 20-ம்நூற்றாண்டின் இணையற்ற ஓவியர் அம்ரிதா ஷேர் கில் 1935-ல் வரைந்த ``பாய்ஸ் வித் லெமன்ஸ்’’ ஓவியம் இடம்பெறுகிறது. இது ரூ.12 கோடி முதல் ரூ.18 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர 25 விலை உயர்ந்த பொருட்கள், அலாரம் கடிகாரம், ஜீகர் லேகல்சர் நிறுவனத்தின் ``ரிவர்ஸோ கிரோடூர்விலோன் 2’’ லிமிடெட் எடிஷன் கைக்கடிகாரமும் அடங்கும். இது ரூ.55 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேர்முக ஏலத்துக்கான பொருட்கள் அனைத்தும் மும்பையில் உள்ள ஏல மையத்தில் பிப்ரவரி 18 முதல் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இதில் எம்எஃப் ஹூசைனின் ஓவியம் மட்டும் 26 லட்சம் டாலருக்கு மேல் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரூ.75 லட்சம் முதல் ரூ.95 லட்சம் வரை ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தை நடத்த உள்ள சாஃப்ரான் ஆர்ட் மையம் ஏலம் போகும் பொருளின் விலையில் 12 சதவீதத்தை தனது கட்டணமாகப் பெறும். பொதுவாக அரசு அல்லாத ஏலம் நடத்த 20 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால்இந்த ஏலத்தை நடத்த 12 சதவீதம் மட்டுமே கேட்டதால், இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு வருமான வரித் துறைக்காக இந்நிறுவனம் நடத்திய ஏலம் மூலம் ரூ.55 கோடி திரட்டியது. இதில் 1881-ம் ஆண்டில் ராஜா ரவி வர்மா வரைந்த திருவாங்கூர் மகாராஜாவின் ஓவியம் 22 லட்சம் டாலருக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.