கடந்த 3 மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இருப்பினும் பின்னர் சற்று நிலைமை சீரடைந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.
சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32096 -க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 34 ரூபாய் உயர்ந்து ரூ.4012-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் 33704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது பற்றி இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சாந்தகுமாரை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் சுழற்சியும் தேக்கமடைந்துள்ளது.
இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
இரண்டாவதாக பொருளாதார தேக்கம் இன்னமும் தொடர்வதாலும் முதலீட்டு நிறுவனங்களின் அச்சம் தீர்ந்தபாடில்லை. அவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
மூன்றாவதாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் மற்ற முதலீடுகளில் முதலீட்டு நிறுவனங்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
இதுமட்டுமின்றி உள்நாட்டிலும் திருமண சீசன், அட்சய திரிதியைக்காக ஆபரணங்கள் செய்வதற்கான தங்கம் வாங்குதல் போன்ற காரணங்கள் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் தங்கம் விலை கூடுதலாக உயருவதற்கு இதுவும் காரணம்.
விலை உயர்வு எவ்வளவு நாள்?
தங்கத்தின் விலை உயர்வு என்பது அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடரும் எனத் தெரிகிறது. அதன் பிறகு சர்வதேச சந்தை மாற்றங்களை பொறுத்து தங்கம் விலையில் மாற்றம் இருக்கலாம்.
இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.