சக்திகாந்த தாஸ் 
வணிகம்

கோவிட் 19 வைரஸ் தாக்கம் சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்- ஆர்பிஐ கவர்னர் தகவல்

செய்திப்பிரிவு

சீனாவில் உருவாகி உலகையேஅச்சுறுத்தும் கோவிட் 19 (கரோனா)வைரஸ் பாதிப்பு காரணமாகஉலக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் இதன் பாதிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், உலக அளவில் இது குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

கோவிட் 19 வைரஸால் ஒருசிலகுறிப்பிட்ட துறைகள்தான் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இவற்றுக்கு மாற்று வழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

உலகின் இரண்டாவது பெரியபொருளாதார நாடாக திகழும் சீனாவில் மிகப்பெரும் தாக்குதலை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்திஉள்ளது. இதனால் சீனாவின் பெரும்பாலான துறைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவில் பார்மா மற்றும் மின்னணு துறை பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு 2003-ம் ஆண்டில் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டபோது உலக அளவில் 6-வது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்கியது. அப்போது சர்வதேச உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 4.2 சதவீதமாக இருந்தது. இப்போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா மாறியுள்ளது. இதன் பங்களிப்பும் 16.3 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். பார்மா துறைக்கான மூலப் பொருளை பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இந்நிறுவனங்களிடம் நான்கு மாதங்களுக்கான ஸ்டாக் கைவசம் உள்ளதால் தற்போதைக்கு பெரும் பாதிப்பு இந்திய நிறுவனங்களுக்கு இல்லை என்றார்.

கோவிட் 19 வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து சீனாவுக்கான இரும்புத் தாது ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இரும்புத் தாதுஅதிக அளவில் குறைந்த விலையில் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் உற்பத்தி விலை குறைய வாய்ப்புள்ளது.

2003-ம் ஆண்டு சார்ஸ் பரவியதால் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது சீன பொருளாதாரம். 2002-ம் ஆண்டில் உலகஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்களிப்பு 23 சதவீதமாக இருந்தது. 2019-ல் இது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் தாஸ் சுட்டிக்காட்டினார். சீனாவில் 11 மாகாணங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிஉள்ளது. இந்நோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளோர் எண்ணிக்கை 74,185 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT