ஹெச்.சி.சி. லாபம் ரூ.24.40 கோடி
கட்டுமானத்துறை நிறுவனமான ஹெச்.சி.சி. நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் ரூ.24.40 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனம் 50.26 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறது.
இந்த காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 20.54 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2013 மார்ச் காலாண்டில் 982.92 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 20.54 சதவீதம் அதிகரித்து 1,184.83 கோடியாக இருக்கிறது.
இந்த காலாண்டில் ரூ.1,017.49 கோடி அளவுக்கு செலவு ஏற்பட்டிருக்கிறது. இது விற்பனையில் 85.8 சதவீதமாகும். கடந்த வருடம் மார்ச் காலாண்டில் நிகர விற்பனையில் 95 சதவீத அளவுக்கு செலவுகள் இருந்தன.
கோத்ரெஜ் புராப்பர்டீஸ் நிகரலாபம் 9% சரிவு
கட்டுமானத்துறையில் இருக்கும் கோத்ரெஜ் புராப்பர்டீஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 9 சதவீதம் சரிந்து ரூ.48.34 கோடியாக இருக்கிறது. கடந்த வருட இதே காலத்தில் ரூ.53 கோடி நிகர லாபம் இருந்தது.
அதே சமயத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 38 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 311.86 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 429.19 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
செலவுகளும் 65 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருட 214 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இப்போது 429 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் 15 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
வி-மார்ட் நிகரலாபம் ரூ.1.09 கோடி
பல பிராண்ட்களை விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிறுவனமான வி மார்ட் நிறுவனத்தின் நிகரலாபம் சிறிதளவு சரிந்து 1.09 கோடியாக இருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 1.14 கோடி ரூபாயாக இந்த நிறுவனத்தின் நிகரலாபம் இருந்தது.
ஆனால் நிறுவனத்தின் நிகர விற்பனை அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 94.95 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 138.67 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.25.15 கோடியாக இருக்கிறது. 2012-13 நிதி ஆண்டில் ரூ.18 கோடியாக இருந்தது.
இயக்குநர் குழு ஒரு பங்குக்கு ஒரு ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறது.