வணிகம்

இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் மேகி: நெஸ்லே திட்டவட்டம்

பிடிஐ

மேகி நூடுல்ஸ் உணவுப்பொருள் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியதையடுத்து, உற்சாகம் அடைந்துள்ள நெஸ்லே நிறுவனம், மேகி நூடுல்ஸை மீண்டும் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்குக் கொண்டு வரும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

காரியம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் அதிக அளவில் இருந்ததான விவகாரத்தில் நாடு முழுதும் மேகி நூடுல்ஸ்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. சுமார் 30,000 டன்கள் மேகி நூடுல்ஸ் அழிக்கப்பட்டதில் நிறுவனத்துக்கு ரூ.450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேகி உட்பொருளின் சுவையூட்டிகளின் அளவில் எந்த வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று நெஸ்லே நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நெஸ்லே இந்தியா நிர்வாக இயக்குநர் சுரேஷ் நாராயணன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “வழிகாட்டுதல்களின் படி பஞ்சாப், ஹைதராபாத், ஜெய்பூர் சோதனை நிலையங்களில் மேகி பரிசோதனை செய்யப்படும்.

அனைத்து அங்கீகாரங்களையும் பெற்றுவிடும் தருணத்தில் செப்டம்பர் மத்தியில் மீண்டும் மேகி சந்தைக்கு வரும். அடுத்த காலாண்டில் மேகி சந்தைக்கு வந்துவிடும்.

6 வாரங்களில் புதிய மேகி பரிசோதனைக்குட் படுத்தப்பட்டு உற்பத்தி தொடங்கப்படும், பிறகு மீண்டும் பரிசோதனை சாலைகளுக்கு அனுப்பப் படும்” என்றார்.

மேகி நூடுல்ஸின் (சர்ச்சைக்குரிய) உட்பொருட்கள் அல்லது சுவையூட்டிகள் மாற்றபடுமா அல்லது நீக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “கடந்த 30 ஆண்டுகளாக எப்படி இருந்ததோ, அப்படியே எதிர்காலத்திலும் நீடிக்கும்” என்றார்.

“தடையினால் சேதமடைந்த நிறுவனத்தின் பெயரை மீண்டும் எடுக்க வேண்டும். இதற்காக நுகர்வோரிடம் மேகி நூடுல்ஸின் பாதுகாப்பை எடுத்துச் செல்ல பெரிய அளவில் செலவு செய்யவிருக்கிறோம்.

சர்ச்சைக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டது. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே முக்கியம். அதனால்தான் அனைத்து மேகி நூடுல்ஸையும் சந்தையிலிருந்து திரும்ப பெற்றோம்.

குளூட்டமிக் என்பது அனைத்து உணவுப்பொருள்களிலும் இயற்கையாகவே இருப்பதுதான், நாங்கள் கூடுதலாக எதையும் சேர்ப்பதில்லை என்று விளக்கமளித்தோம்.

ஏற்றுமதி செய்யப்படும் மேகிக்கும், உள்நாட்டில் விற்கப்படும் மேகிக்கும் பேக்கேஜிங்கில் மட்டுமே வித்தியாசம்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT