உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஏஜிஆர் நிலுவைக் கட்டணம் ரூ. 44 ஆயிரம் கோடியைச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், வோடஃபோன் ஐடியா நிறுவனம் திவால்நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை அவ்வாறு வோடஃபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் திவால் நோட்டீஸ் அளித்தால் அது மிகப்பெரிய நடவடிக்கையாகவும், இந்திய தொலைத்தொடர்பு சந்தையிலும், பங்குச்சந்தையிலும் பெரும் அதிர்வலையை, பூகம்பத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தவிர்க்க சட்டப்படிப் பார்த்தால் வோடஃபோன் ஐடியா நிறுவனம் என்சிஎல்டி அமைப்பில் திவால் நோட்டீஸ் அளிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து நிறுவனத்தைச் சேர்ந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம், ஏஜிஆர் நிலுவைத் தொகையான ரூ.44 ஆயிரம் கோடியை விரைவில்செலுத்தி விடுவதாக பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது. ஆனால், எவ்வளவு செலுத்தப்போகிறேன் என்று வோடஃபோன் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
வோடஃபோன் ஐடியா நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், " தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வருவாய் பகிர்வுத் தொகையை நாங்கள் அடுத்த சில நாட்களில் செலுத்திவிடுகிறோம். ஆனால், நாங்கள் தொடர்ந்து இந்தியாவில் தொழில் செய்வது நாங்கள் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் அளிக்கும் சாதகமான உத்தரவைப் பொறுத்துத்தான் அமையும்" எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கடுமையான உத்தரவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு இருக்கும் ஏஜிஆர் நிலுவைத் தொகையை மார்ச் 17-ம் தேதி நடக்கும் விசாரணைக்கு முன்பாக செலுத்தி இருக்க வேண்டும், அனைத்து தொலைத் தொடர்புதுறை தலைமை அதிகாரிகளும் நீதிமன்றம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி வோடஃபோன் நிறுவனத்திடம் இருக்கும் ரொக்கம் மற்றும் ரொக்கப்பணத்துக்கு ஈடாக ரூ.12,530 கோடி கைவசம் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை என்பது வோடஃபோன் நிறுவனம் ஏஜிஆர் நிலுவைத் தொகையைச் செலுத்த தேவையானவற்றில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே என்பதால், அடுத்து வரும் நாட்களில் வோடஃபோன் நிறுவனம் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது
இதற்கிடையே தொலைத்தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, டாடா டெலி சர்வீஸ் ஆகியவற்றுக்கு மோடி அரசு நெகிழ்வுத்தன்மையான போக்கை கையாண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பாஜகவுக்குத் தேர்தல் நிதிப்பத்திரங்களில் அதிக அளவு நன்கொடை கொடுத்ததில் முக்கியமானவை என்பதால் மத்திய அரசு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தத் தாமதப்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன
2017-18-ம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரங்களின்படி, பாஜகவுக்கு 38 சதவீதம் நன்கொடைகள் புருடென்ட் எல்டோரல் டிரஸ்ட்(ரூ.154.30கோடி), ஏபி. ஜெனரல் எலக்ட்ரல் டிரஸ்ட்(ரூ.12.5 கோடி) ஆகிய இரு பெரு அமைப்புகள் மூலம் வந்துள்ளன
ஊடகங்களில் வெளியான தகவலின்படி கடந்த 2018, ஜனவரி 1 முதல் 2019, மார்ச் 31-ம் தேதி வரை பாஜகவுக்கு ரூ.800 கோடி நன்கொடை மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கிடைத்துள்ளது என்றும், அதில் டாடா நிறுவனத்தின் ஆதரவோடு செயல்படும் புரோகிரஸிவ் எலக்ட்ரல் டிரஸ்ட் சார்பில் ரூ.356 கோடி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
பார்தி ஏர்டெல், டிஎல்எப், ஹீரோ குழுமம் ஆகியவை இணைந்து ரூ.67 கோடியை புரூடென்ட் எலக்ட்ரல் டிரஸ்டுக்கு வழங்கியுள்ளன. ரூ.38கோடி காங்கிரஸ் கட்சிக்கும் வழங்கியுள்ளன.
ஆதித்யா பிர்லா ஜெனரல் எலக்ட்ரல் டிரஸ்ட் ரூ.28 கோடி பாஜகவுக்கும், ரூ.2 கோடி காங்கிரஸ் கட்சிக்கும் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன