உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்தியத் தொலைத் தொடர்புத் துறைக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.10,000 கோடியை பிப்ரவரி 20 தேதி வாக்கில் செலுத்துவதாக தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள தொகையினையும் அடுத்த விசாரணை தேதியான மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாக பார்தி ஏர்டெல் உறுதி அளித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரியையும், தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணையின் போது காட்டமாகக் கண்டித்தது. சுமார் 15 நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.1.47 லட்சம் கோடி நிலுவைத்தொகை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24, 2019-ல் பிறப்பித்தது.
இந்நிலையில் தொலைத் தொடர்புத் துறையின் டெஸ்க் அதிகாரி ஒருவர் நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்களிடம் கடுமை காட்ட வேண்டும், பலவந்த நடவடிக்கைகள் வேண்டாம் என்று கடித உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை உச்ச நீதிமன்றம் மிக வன்மையாகக் கண்டித்து கூறும்போது, “" உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எப்படி தொலைத்தொடர்பு துறையின் டெஸ்க் ஆபிஸர் கடிதம் எழுத முடியும்? இந்த நாட்டில் சட்டம் இருக்கிறதா? இப்படித்தான் நீதிமன்றத்தை நடத்துவீர்களா?
இது 100% கோர்ட் அவமதிப்பாகும். உங்கள் டெஸ்க் அதிகாரி இன்னும் அரை மணிநேரத்திலோ ஒரு மணிநேரத்திலோ அந்தக் கடித உத்தரவைத் திரும்பப் பெறவில்லை எனில் அவர் இன்றைக்கே சிறைக்கு அனுப்பப்படுவார். அந்தக் கடிதத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். அந்த டெஸ்க் அதிகாரி இங்கு வந்தாக வேண்டும்.
இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை யார் செய்தார்கள் என எங்களுக்குத் தெரியாது. இவை அனைத்தையும் உருவாக்கியது யார்? நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இந்த நீதிமன்றத்தில், நீதிமன்றச் செயல்பாட்டு முறையில் வேலை செய்யக்கூடாது என்று நான் உணர்கிறேன். நான் மனவேதனையோடு முழுப் பொறுப்புணர்வுடன் இதைக் கூறுகிறேன்” என்று நீதிபதி அருண் மிஸ்ரா காட்டமாக கண்டித்தார்.
இதனையடுத்து கடித உத்தரவை வாபஸ் பெறுவதாக உடனடியாக அறிவித்த தொலைத் தொடர்புத் துறை 14.2.20 இரவு 11.59க்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில்தான் பார்தி ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி 20ம் தேதி வாக்கில் ரூ.10,000 கோடியை முதற்கட்ட நிலுவைத் தொகையாக செலுத்துவதாக தெரிவித்துள்ளது.