வணிகம்

கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் வர்த்தக வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்: ஏ.இ.பி.சி. அகில இந்தியத் தலைவர் ஏ.சக்திவேல் கருத்து

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பின் காரண மாக, சீனாவின் வர்த்தக வாய்ப்பு இந் தியாவுக்கு கிடைக்கும் என ஏ.இ.பி.சி. (APPAREL EXPORT PROMOTION COUNCIL) அகில இந்தியத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இந்திய பின்னலாடைக் கண் காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் 2 முறை சர்வதேச அளவிலான பின்னலாடை கண் காட்சிகளை திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள ஐ.கே.எஃப். கண்காட்சி வளாகத்தில் நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, 47-வது முறையாக வரும் 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை சர்வதேச அளவிலான கோடை கால சிறப்பு பின்னலாடை கண் காட்சி நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. 2020-21-ம் ஆண்டுக்கான சிறப்பு பின்னலாடைகளை உருவாக்கு வதற்காக வெளிநாட்டு வர்த்தகர் களிடம் இருந்து ஆர்டர்களை பெறும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

கண்காட்சி தொடர்பாக ஏ.சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூரில் 47-வது கோடைகால கண்காட்சி தொடங்குகிறது. திருப்பூரில் பருத்தி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் உலக அளவில் செயற்கை நூலிழையினால் ஆன ஆடைகளுக்கு அதிக அளவு வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவைவிட வங்கதேசம், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் அதிக அளவு ஆடைகளை ஏற்று மதி செய்து வருகின்றன. உலக அள வில் ஆயத்த ஆடைக்கு அதிக அளவு வர்த்தக சந்தை வாய்ப்பு உள்ளது.

இதைக் கைப்பற்ற ஏ.இ.பி.சி. சார்பில் புதிய குழு ஒன்றை அமைத்துள்ளோம். ஏற்றுமதியை மேம்படுத்த இந்த குழு மூலம் பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளோம். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் சீன வர்த்தகர்கள் பெரும்பாலானோர் வரவில்லை. அதனால் சீனாவின் வர்த்தக வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதேபோல் ‘பி2பி’ என்ற இணையதள சேவை ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளோம். இதில் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பலர் பதிவு செய்துள்ளனர். நடப்பு ஆண்டில் ஏற்றுமதி 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும். இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT