பொதுத் துறை வங்கிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.2.03 லட்சம் கோடி தொகையை வசூலித்துள்ளன. இதனால் திரும்பாக் கடன் அளவு ரூ.8.96 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.27 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு செப்டம்பர் வரையான காலத்தில் பொதுத் துறை வங்கிகளின் திரும்பாக் கடன் அளவு ரூ.7.27 லட்சம் கோடியாக உள்ளது. அரசும் வங்கிகளும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக இந்த கடன் தொகைவசூலானதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக மொத்தம் உள்ள 18 பொதுத் துறை வங்கிகளில் 12 வங்கிகள் நடப்பு ஆண்டின் முதல்அரையாண்டில் லாபம் ஈட்டியுள்ளதாக அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகள் குறித்த அறிக்கையில் பொதுத் துறை வங்கிகள் லாபப் பாதைக்கு திரும்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
திவால் நடைமுறை சட்டத்தை அரசு விரைவுபடுத்தியதும், வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் நிதி நிலை மேம்பட உதவியுள்ளது. வர்த்தக வங்கிகளின் மூலதன விகிதம் 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாராக் கடனுக்கு பொதுத் துறை வங்கிகள் ஒதுக்கிய தொகை 61.5 சதவீதமாகும். இதன் காரணமாக வங்கிகளின் வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
வங்கிகளில் கடன் பெற்று திரும்பசெலுத்தாதது, மோசடி போன்ற நடவடிக்கைகளால் வங்கிகள் கடன் அளிப்பது பாதிக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதிய பணப்புழக்கம் நிலவ ரிசர்வ்வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நின்றுபோன திட்டப் பணிகளுக்கு தேவையான நிதி கிடைக்க என்பிஎஃப்சிக்களுக்குப் போதிய நிதி கிடைக்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரூ.500 கோடி மற்றும் அதற்குமேலான தொகைகளை நிர்வகிக்கும் என்பிஎஃப்சிகள் நிதிச் சிக்கலை எதிர்கொண்டால் அவற்றுக்குஐபிசி வாயிலாக உரிய தீர்வை காணும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் தகுதிபடைத்த நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் பொதுத் துறை வங்கிகள் தயக்கம் காட்டினால், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது பணியை சரியாக செய்யவில்லை என்ற பிரிவின்கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார்.
வங்கியியல் மற்றும் நிதி முறைகேடு குறித்து ஆலோசனை வழங்கும் அமைப்பு ரூ.50 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளை மத்திய குற்ற புலனாய்வு அமைப்புக்கு பரிந்துரைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர் வட்டி குறைப்பு காரணமாக வங்கிகள் கடன் வழங்குவதை எளிதாக்கியுள்ளன. இது அனைத்து துறைகளுக்கும் கிடைக்கும் வகையில் கண்காணிக்கப்படுகிறது என்றார். வங்கிகளின் செயல்பாடுகளைச் சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் பொதுத் துறைவங்கிகளில் ஒருங்கிணைந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.