தொழில் தொடங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கும் நோக்கில் நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் ‘ஸ்பைஸ் ’ என்ற விண்ணப்பப் படிவத்தை அறிமுகம் செய்ய உள்ளது. நிறுவனம் தொடங்குவது தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் இந்தப் படிவத்தில் உள்ளடங்கியதாக இருக்கும்.
நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டு வருகிற நிலையில், மத்தியஅரசு இந்தப் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் இந்தப் புதிய படிவம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி, தொழில் வரி, வங்கிக் கணக்குகள் தொடங்குதல், ஜிஎஸ்டி பதிவு ஆகிய நிறுவனம் தொடங்குவது தொடர்பான ஆரம்பகட்ட நடைமுறைகள் அனைத்தையும் இந்த ‘ஸ்பைஸ் ’ என்ற ஒற்றைப் படிவத்தின் வழியே செய்து முடிக்க முடியும். இதனால் நிறுவனம் தொடங்குவது தொடர்பான நடைமுறை எளிமையாகும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் காலதாமதம்குறைக்கப்படுவது மட்டுமல்லாமல், நிறுவனப் பதிவுக்கான செலவுகளும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் செய்வதற்கு ஏற்றநாடுகளின் பட்டியலில் இந்தியா63-வது இடத்தில் உள்ளது. ஆனால் தொழில் தொடங்குவதற்கான நாடுகள் பட்டியலில் 136-வதுஇடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.