வணிகம்

கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செய்திப்பிரிவு

வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒருமுறை வங்கி வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளை எடுக்கிறது. அதனப்டி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

கூட்டத்திற்கு பிறகு வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி வட்டி விகிதமானது (ரெப்போ) 5.15 சதவீதம் என்ற முந்தைய நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வட்டி விகிதத்தை மாற்றாவிட்டாலும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நடவடிக்கைகள் எடுப்பது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலையைத் தடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய வட்டி விகித குறைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து வந்தது. கடந்த வருடத்தில் நடத்தப்பட்ட 5 நிதிக் கொள்கை கூட்டத்திலும் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் இந்த ஆண்டில் நடைபெற்ற 5 நிதிக் கொள்கை கூட்டங்களில் 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாக இருந்தது.எனினும் கடைசியாக டிசம்பரில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT