மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செப்டம்பர் மாதம் பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
செப்டம்பர் 15-ம் தேதிக்குள் இந்த சந்திப்பு நடைபெறும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளைச் சீரமைக்க 7 அம்ச திட்டத்தை கடந்த வாரம் ஜேட்லி அறிவித்தார். இந்திர தனுஷ் என்ற பெயரிலான இந்த சீர்திருத்த திட்டம் குறித்து வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த மதிப்பீட்டுக் கூட்டம் செப்டம்பர் மாதம் நடைபெறும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வங்கிகளின் வாராக் கடன் குறித்த ஆய்வும் இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.
பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 6.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 5.20 சதவீதமாக இருந்தது. எனவே இதுவும் ஆலோசனையில் முக்கிய பிரச்சினையாக இடம்பெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது மத்திய அரசின் மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் திட்டம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சிறு குறுந் தொழிலுக்கு கடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட முத்ரா வங்கி உருவாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகளை நிர்வாக ரீதியில் சிறப்பாக செயல்பட வைக்க இரண்டு தனியார் துறை வங்கிகளின் தலைவர்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு நியமிக்கப்பட்டனர். இதன்படி பாங்க் ஆப் பரோடா மற்றும் கனரா வங்கிக்கு புதிய தலைவர்கள் கிடைத்தனர்.
வங்கிகளின் மூலதனத்தை உயர்த்த அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.70 ஆயிரம் கோடியை மத்திய அரசு முதலீடு செய்யும் என்றும் இதில் ரூ.25 ஆயிரம் கோடி இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் பொதுத்துறை வங்கித் தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.