வணிகம்

பணவீக்க உயர்வு, தேக்க நிலை பொருளாதார சூழலில் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டம் ஆரம்பம்

செய்திப்பிரிவு

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் (எம்பிசி) நேற்று ஆரம்பமானது. மத்திய பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு அதிகரித்துள்ளது. பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார தேக்க நிலை சூழலில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்பு நிதிக் கொள்கை குறித்து விவாதிக்கும் கூட்டம் நடைபெறும். தற்போதைய சூழலில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுப்பதா அல்லது முந்தைய நிலையே தொடர்வதா என்று முடிவெடுப்பது எம்பிசி குழுவுக்கு மிகுந்த சவாலான விஷயமாகும்.

6-வது நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வியாழக் கிழமை வெளியிடப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 சதவீதமாக இருக்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் சில்லரை பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.3 சதவீதமாக இருந்தது. முந்தைய நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி குறைப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாக உள்ளது. நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை முந்தைய இலக்கான 3.3 சதவீதத்தைக் காட்டிலும் 3.8 சதவீத அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் பட்சத்தில், அரசு வெளிச்சந்தையில் கடன் வாங்கும் நிலை உருவாகும். இது வங்கி வட்டிவிகிதத்தை பாதிப்பதோடு, பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதையும் சவாலானதாக மாற்றி விடும்.

SCROLL FOR NEXT