மத்திய பட்ஜெட்டில் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளைஅரசு விற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்படுவதால் அதன் உத்தரவாதத்துக்கு எந்தவித பாதிப்பும் வராது என்றும், 30 கோடி பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம் காப்பாற்றப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
2020-21 மத்திய பட்ஜெட்டில் அரசின் பங்கு விலக்கல் இலக்கில் எல்ஐசி நிறுவனமும் இணைக்கப்பட்டது. அரசு 100 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் எல்ஐசியில் ஒரு பகுதி பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்படுவது குறித்த அறிவிப்பு நாடு முழுவதும் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
எல்ஐசி பங்குகள் விற்கப்படுவதால் என்னென்ன மாற்றங்கள் வருமோ என்ற அச்சம் எல்ஐசிநிறுவனத்தாருக்கும், பாலிசிதாரர்களுக்கும் எழுந்துள்ளது.
விவாதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், நிர்மலா சீதாராமன் தனது கருத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.
“எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளை பொதுப் பங்கு வெளியீட்டில் விற்பனை செய்கிறோமே தவிர, இதனால் அதன் நிர்வாகத்தில் எந்தவித மாற்றங்களும் வராது. அரசு நிறுவனமாகவே அது தொடரும்” என்று கூறியுள்ளார்.