மத்திய பட்ஜெட்டில் உப்பு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் எளிமையான வங்கிக்கடன் கிடைக்கவும், இன்சூரன்ஸ் சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் தரப்பு எதிர்பார்ப்பு குறித்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேதாரண்யம் பகுதி உப்பு உற்பத்தியாளர் ஜி.முரளி கூறியதாவது:
தமிழகத்தில் ஏறக்குறைய 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உப்புத் துறைக்கு சொந்தமான நிலமாகும். தூத்துக்குடி, வேதாரண்யம், உள்ளிட்ட இடங்களில் அதிகளவு உப்பு உற்பத்தியாகிறது. சமையல் உப்பு மட்டுமின்றி தொழில்துறைக்கு தேவையான உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் தமிழக உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். விவசாயத்தை போலவும் கவனிப்பதில்லை. உப்பு உற்பத்திக்கு மற்ற தொழில்களை போலவும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை.
குஜராத் உட்பட வேறு சில மாநிலங்களில் சலுகை விலையில் மின்சாரம் கிடைக்கும் நிலையில் தமிழகத்தில் அந்த சூழல் இல்லை. எனவே தமிழக உப்பு உற்பத்தி பகுதிகளை மத்திய அரசு சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வங்கி கடன் பெறும் வாய்ப்பில்லை. முத்ரா திட்டத்தின் கீழ் மற்ற பல தொழில்களுக்கு வங்கி கடன் வழங்கப்படும் நிலையில் அதே வாய்ப்பை உப்பு உற்பத்தியாளர்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும். உப்பளங்களை இன்சூரன்ஸ் செய்வதற்கு எந்த சலுகையும் இல்லை.
உப்பு உற்பத்தி தொழிலும் விவசாயத்தைபோலவே இயற்கையை நம்பி இருப்பதாலும், உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் தொழிலாளர்கள் அளவிலேயே இருப்பதாலும், அவர்கள் பொருளாதார நிலை உயராத நிலையில் அவர்களுக்கு விவசாயத்தை போல இன்சூரன்ஸ் பிரிமியம் சலுகை வழங்க வே்ணடும்.
பல்வேறு ரசாயன தயாரிப்புக்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்த ரசாயனங்கள் இறக்குமதி ஆவதால் உப்பு உற்பத்தியாளர்களும் மறைமுகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு சார்ந்த ரசாயனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவர்.
கஜா புயல் ஏற்பட்டபோது வேதாரண்யம் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அப்போது இங்கு பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய நிவாரண உதவிகள் வழங்குவதாக கூறினார்.
அதற்கான அறிவிப்புகள் வந்தபோதும் இதுவரை நிதியுதவி எதுவும் வழங்கப்படவில்லை. சிறப்பு நிதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உப்பு உற்பத்தியாளர்களிடையே உள்ளது. இதனை பட்ஜெட்டில் அவர் அறிவிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.