வணிகம்

கரோனா வைரஸ் பாதிப்பு- பங்குச் சந்தையில் தொடர் சரிவு

செய்திப்பிரிவு

சீனாவில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பீதி காரணமாக சர்வதேச பொருளாதாரம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வாரத்தின் இரண்டாவது நாளிலும் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 3 தினங்களே உள்ளதால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தள்ளிப் போட்டுள்ளனர். நிறுவன வரி குறைப்பு காரணமாக அரசின் வரி வருவாய் குறையும் என்பதாலும் பங்குச் சந்தையில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்யும் போக்கு காணப்பட்டது.

நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 188 புல்ளிகள் சரிந்து குறியீட்டெண் 40,966 ஆக இருந்தது. இது கடந்த 6 வாரங்களில் காணப்படாத சரிவாகும். காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து புள்ளிகள் 463 வரை சரிந்தது. பிறகு நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வர்த்தகம் முடிவில் சரிவு 188 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 63 புள்ளிகள் சரிந்து 12,055 ஆக இருந்தது.

ஏர்டெல் கடும் சரிவு

பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. இந்நிறுவன பங்கு 4.55 சதவீதம் வரை சரிந்தது. இதற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி, ஐடிசி, நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

அதேசமயம் ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, பங்குகள் 1.53 சதவீதம் வரை உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் தொலைத் தொடர்புத் துறை பங்குகள் 4.11 சதவீத சரிவுக்குவழிவகுத்தன. இதற்கு அடுத்தபடியாக உலோகம், எரிசக்தி, மின்சாரம், ஆட்டோமொபைல், எப்எம்சிஜி பங்குகளும் சரிவுக்கு காரணமாயிருந்தன. எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் மட்டும் கூடுதல் விலைக்கு விற்பனையாயின.

சீனாவின் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பங்குகளை விற்கும் போக்கு அதிகமாக இருந்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையில் தென் கொரியாவின் கோப்சி பங்குச் சந்தை 3 சதவீத சரிவையும், ஜப்பானின் நிகெகி 0.55 சதவீத சரிவையும் சந்தித்தன. ஐரோப்பிய பங்கு சந்தைகளிலும் ஸ்திரமற்ற போக்கு காணப்பட்டது.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணைய் விலை 0.77 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 58.13 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 9 காசுகள் அதிகரித்து ரூ.71.34 என்ற நிலையை எட்டியது.

கார்ப்பரேட் மற்றும் வருமான வரி வசூல் நடப்பு நிதி ஆண்டின் இலக்கான ரூ.1.5 லட்சம் கோடியை எட்டுவது கடினம் என்று தெரிகிறது. சுமார் ரூ.50 ஆயிரம் கோடி வரை ஜிஎஸ்டி வசூல் குறையும் என்றும் கூறப்படுகிறது. தேக்க நிலை நிலவும் பொருளாதார சூழலில் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் மத்திய பட்ஜெட்டையே எதிர்நோக்கியிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT