தற்போது இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளும் சர்வதேச பிரச்சினைகளால் உருவாகிறது. இந்தியாவின் அடிப்படை மிகவும் பலமாக இருக்கிறது, அதனால் சர்வதேச சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்த சவால்களை இந்தியா எதிர்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறியதாவது.
இந்தியாவின் பேரியல் பொருளாதார தகவல்களான பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு, கட்டுமான துறையில் செய்யப்படும் முதலீடு, அரசுக்கு வரும் வருமானம் ஆகிய அனைத்தும் சாதகமாகவே இருக்கிறது.
தற்போது சர்வதேச பொருளாதாரம் சவாலான நிலையில் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பது நிச்சயமற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்கா உலகின் முக்கிய பெரிய பொருளாதாரம் ஆகும். அங்கு நடக்கும் முக்கிய செயல்கள் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சீனா இன்னொரு முக்கியமான நாடு. சர்வதேச மந்த நிலை காரணமாக அவர்களும் பாதிப்படைந்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் நிலையற்றவை.
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் பலமாக இருக்கும் போது, இது போன்ற சவால்களை எதிர்கொள்வது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவின் அடிப்படை தொடர்ந்து பலமடைந்து வருகிறது.
தற்போது உருக்கு துறையும் சவால்களை சந்தித்து வருகிறது. இதற்கு காரணமும் சர்வதேச சூழ்நிலைகள்தான். வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்ததற்கு ஸ்டீல் துறை முக்கியமான காரணமாகும். இந்த துறைக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துறையின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். முதலில் உள்நாட்டு துறையை போட்டிக்குரியதாக்க வேண்டும். இந்த துறை போட்டிக்குரியதாக இருந்தால் வெளிநாட்டு சூழ்நிலைகள் பெரிதாக பாதிக்காது.
விரைவில் சுரங்க உற்பத்தி திறன் அதிகப்படுத்தப்படும். அப்போது மூலப்பொருட்களின் உற்பத்தி உயரும். அதனால் அவற்றின் விலை குறையும் என்றார்.
மார்ச் காலாண்டு முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2.67 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது