இந்தியா தற்சமயம் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், வரும் 2020-21-ம்நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று இந்தியா ரேட்டிங் தெரிவித்துள்ளது. மக்களின் வருமானம் குறைந்திருப்பது, வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் பணப்புழக்கம் குறைந்திருப்பது பொருளாதார சரிவுக்கான முக்கிய காரணிகள் என அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள், பணச் சுழற்சியை ஏற்படுத்தும் வகையில் உரிய பலனை அளிக்கவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 4.8 சதவீதமாகக் குறையும் என்று ஐஎம்எஃப் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் வரும் நிதி ஆண்டில் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று இந்தியா ரேட்டிங் தெரிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை
தற்போதைய நிலையில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 3.6 சதவீதமாக உயரும். இதனால் அரசு செலவீனங்கள் தொடர்பாக கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை அளவை 3.3 சதவீதத்துக்குள் வைக்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் தற்போது அரசின் வரி வருவாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை அரசு நிர்ணயித்ததைவிட அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது மக்களின் நுகர்வு கடுமையாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் வரும் பட்ஜெட்டில் மக்களிடம் பணம் புழங்கச் செய்யும் வகையில் திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியா பணவீக்கம், வாராக் கடன்கள், தனியார் முதலீடுகளில் ஏற்பட்ட சரிவு என மூன்று பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டு இருப்பதாக இந்தியா ரேட்டிங் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா கூறியுள்ளார்.
சில்லறை பணவீக்கம் 2020-21-ம்நிதி ஆண்டில் 3.9 சதவீதமாகவும், மொத்தவிலை பணவீக்கம் 1.3 சதவீதம் அளவிலும் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் வாராக் கடன் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. விளைவாக வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால் நாட்டில் பணச் சுழற்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சரிவுக்கான அடிப்படைக் காரணிகளில் இது முக்கியமான ஒன்று என அவர் தெரிவித்தார்.
அதேபோல் தனியார் முதலீடுகள் கடுமையாக சரிந்துள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் முதலீடுகளை அதிகரிப்பது மிக அவசியம். அரசு அது தொடர்பாக கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.