இந்திய வாகனக் கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் 7 முதல் 12-ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தச்சூழலில், இந்த ஆண்டு வாகனச்சந்தை ஏற்றம் காணும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குநர் ராஜேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
‘பல்வேறு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் புதியத் தயாரிப்புகளை இந்தக் கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளன. 70 புதியவாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. மின்சார வாகனத் தயாரிப்பில் ஈடுபடும் 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்த இருக்கின்றன.
இந்நிலையில் வரும் நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து வாகன விற்பனை உயர வாய்ப்புள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியை குறைக்க...
கடந்த ஓராண்டுகாலமாக வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. முன்னணி வாகன நிறுவனங்கள் அதன் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இந்நிலையில் இந்த நெருக்கடியில் இருந்து மீட்கும் வகையில் மத்திய அரசு, வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இந்திய நிறுவனங்கள், மின்சார வாகனங்களில் கவனம்செலுத்தி வருகிற நிலையில்,இந்தக் கண்காட்சி மின்சாரவாகனங்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.