இனி தனியார் வங்கியில் இருந்து பொதுத்துறை வங்கி களுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய நிதிச்சேவைகள் பிரிவு செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார்.
பொதுத்துறை வங்கியில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் ஒருவரே இருந்து வந்தார்கள். அந்த பதவியை இரண்டாக மத்திய அரசு பிரித்தது. தலைவர் பதவிக்கு ஒருவரையும், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு ஒருவரை நியமிக்க அரசு முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் சிட்டி வங்கியில் பணியாற்றிய பி.எஸ். ஜெயகுமார் பேங்க் ஆப் பரோடாவின் நிர்வாக இயக்குநராகவும், லஷ்மி விலாஸ் வங்கியில் பணியாற்றிய ராகேஷ் சர்மாவை கனரா வங்கி நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர்.
தற்போது நிர்வாக இயக்குநர் தேர்வு முறையை மொத்தமாக மத்திய அரசு மாற்றி இருக்கிறது.
பெரிய ஐந்து வங்கிகளுக்கு மட்டும் தனியார் வங்கி தலைவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. மூன்று கட்ட பரிசீலனைக்கு பிறகு மூன்று தனிப்பட்ட குழுவின் நேர்காணலுக்கு பிறகு தனியார் வங்கி தலைவர்களை பொதுத்துறை வங்கிக்கு நியமனம் செய்யப்பட்டார்கள் என்று ஹாஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “ஐந்து பெரிய பொதுத்துறை வங்கிகளுக்கு வேறு நடைமுறைகளைப் பின்பற்றினோம். மீதமுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு வெளியில் இருந்து நிர்வாக இயக்குநரை நியமிக்க மாட்டோம்.
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் தகுதியான செயல் இயக்குநர்கள், நிர்வாக இயக்குநர் பதவிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது இந்தியன் வங்கி, ஆந்திரா வங்கிக்கு தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்கள் நியமிக்க வேண்டும். இம்மாத இறுதியில் யூகோ வங்கியில் நிர்வாக இயக்குநர் பணியிடம் காலியாகும். இந்த மூன்று வங்கிகளுக்கான நிர்வாக இயக்குநர்களை நியமிக்கும் பணி இன்னும் மூன்று மாதத்தில் முடிவடையும்” என்றார்.