வணிகம்

அடுத்த 4 ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும்: மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தகவல்

செய்திப்பிரிவு

நிலக்கரி உற்பத்தி தொடர்பான தட்டுப்பாடுகள் அடுத்த 4 வருடத்துக்குள் நிவரத்தி செய்யப்படும் என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நிலக்கரி உற்பத்தி தொடர்பான சட்ட திருத்ததுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்த 4 ஆண்டுகளில் நிலக்கரி தொடர்பான இறக்குமதிகள் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எஃகு மற்றும் எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே நிலக்கரி சுரங்கத்துக்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிற நிறுவனங்கள் நிலக்கரி ஏலத்தில் பங்கு பெறும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை சமீபத்தில் கொண்டுவந்தது.

இந்நிலையில், நிலக்கரி சுரங்கத் துறையில் போட்டி அதிகரித்து உற்பத்தி பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியபோது, ‘மத்திய அரசின் புதிய அறிவிப்பு நிலக்கரி சுரங்கத் துறையில் மிகமுக்கியமான சீர்திருத்தம் ஆகும். தற்போது இருக்கும் பற்றாக்குறை அடுத்த நான்கு ஆண்டுகளில் சரியாகிவிடும். அதன் பிறகு நிலக்கரி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும். இந்தியாவிலேயே தேவையான அளவு நிலக்கரி கிடைக்கத் தொடங்கும். தற்போது100 நிலக்கரி சுரங்க அமைப்புகள் ஏலத்துக்கு தயாராக உள்ளன’ என்று அவர் கூறினார். நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா 80 சதவீத பங்குவகிக்கிறது. இந்நிலையில் இத்துறையில் பிற நிறுவனங்களும் கால்பதிக்கும் பட்சத்தில் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும்.இதனால் இறக்குமதிக்கான தேவை குறையும். கடந்த 2018-19-ம் ஆண்டில் 235 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அதன் மதிப்பு ரூ.1.7 லட்சம் கோடி ஆகும்.

SCROLL FOR NEXT