இந்திய இறக்குமதியாளர்கள், பெருவாரியான பொருட்களை ‘பிற’ என்ற வகையின்கீழ் இறக்குமதி செய்கின்றனர். இந்நிலையில், இறக்குமதியாளர்கள், முறையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் ‘பிற’ வகையின்கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விகிதம் அதிகரிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.
இறக்குமதி தொடர்பாக ஹெச்எஸ்என் என்ற வகைப்பாடு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில், பொருட்கள் மீதான வரிகள்,அவற்றின் பிரிவுகள் ஆகியவை வகைப்படுத்தப்பட்டு இருக்கும். இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யும்போது இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இவ்வகைப்பாட்டில் அடங்காத ‘பிற’ என்ற பிரிவின்கீழ்இறக்குமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் இறக்குமதியாளர்கள் முறையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
‘இறக்குமதி தொடர்பாக இந்தியாபெரும் பிரச்சினையை எதிர்கொண்டு உள்ளது. பெரும்பாலான பொருட்கள் அவற்றின் உரிய பிரிவின்கீழ் இறக்குமதி செய்யப்படாமல், ‘பிற’ பிரிவின்கீழ் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
2018-19-ல் மொத்தமாக 500 பில்லியன் டாலர் மதிப்பில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதில் 100 பில்லியன் டாலருக்கும் மேலாக ‘பிற’ பிரிவின்கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் நான்கில் ஒரு பொருள் ‘பிற’ வகையின்கீழ் இறக்குமதி செய்யப்படுகிறது.
இனி வரும் காலங்களில் இறக்குமதியாளர்கள் முறையான விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு இறக்குமதியாளர்கள், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தை (டிஜிஎஃப்டி) அணுக வேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக இறக்குமதியாளர்கள் தங்கள் தரப்பை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கிஉள்ளார். அதன்பிறகு, இறக்குமதியாளர்கள் ஹெச்எஸ்என் விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்து தயாரிப்புகளையும் இறக்குமதி செய்ய வேண்டும். ‘பிற’ பிரிவின்கீழ் இறக்குமதி செய்பவர்கள், அமைச்சகத்தை அணுகி சிறப்பு உரிமம் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தவறும்பட்சத்தில் ‘பிற’ பிரிவின்கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது இருக்கும் ஹெச்எஸ்என் விதிமுறைகளில் அடங்காத பொருட்களுக்கென்று தனியாக ஹெச்எஸ்என் விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.