வணிகம்

முடிவுக்கு வருகிறது வர்த்தகப் போர்: சீனா - அமெரிக்கா முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சீன- அமெரிக்கா இடையே ஒரு வருடத்துக்கும் மேலாக வர்த்தகப் போர் நீடித்து வந்த நிலையில், இவ்விரு நாடுகளிடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக அறிவுசார் சொத்து பாதுகாப்பு, அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கான தடைகள்,நாணய மதிப்புகளை மாற்றுதல் தொடர்பான நடவடிக்கைகளை கைவிடுதல், வர்த்தக உறவை சமப்படுத்துதல், பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன துணை பிரதமர் லியூ ஹீ இந்த ஒப்பந்தத்தில் புதன் கிழமை அன்று கையெழுத்திட்டனர்.

சீனா - அமெரிக்காவுக்கு இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வர்த்தகப் போர்நிலவி வந்தது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் மாறி மாறி வரி விதித்துக் கொண்டன. இதனால் இரு நாட்டு நிறுவனங்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. தவிர, உலகப் பொருளாதாரச் சூழலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பலகட்ட முயற்சிக்குப் பிறகு தற்போது இரு நாட்டுக்கும் இடையே சுமுக நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் இருநாடுகளும் பயன் அடைவது மட்டுமல்லாமல், உலக அமைதிக்கும் வித்திடும் என்று தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், மேம்பட்ட உறவுக்காக சீனா செல்ல இருப்பதாக தெரிவித்தார். அதேசமயம், இரண்டாம் கட்ட ஒப்பந்தம் நிறைவேறும் வரையில் சீனா மீதான வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வாஷிங்டனில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் சீனா மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT