மும்பையை தொடர்ந்து மேலும் ஒரு கூட்டுறவு வங்கியில் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதால் முதல் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் பஞ்சாப் அண்ட் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் அம்பலமான நிர்வாக மோசடியால் வங்கியின் மொத்த செயல்பாடும் முடங்கியது. வங்கியில் இருப்பு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய சொந்த பணத்தை எடுக்கவே ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. முதலில் ரூ.1,000 மட்டுமே எடுக்க முடியும் எனக் கூறியது. பின்னர் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, ரூ.10 ஆயிரமாக உயர்த்தியது. தற்போது ரூ.50 ஆயிரம் வரை எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை, திருமணம் மற்றும் பிற நெருக்கடி காரணங்களுக்காக பணம் தேவைப்படும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் இருப்பில் ரூ.1 லட்சம் வரை எடுத்துக் கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹரா வங்கிக்கும் ரிசர்வ் வங்கி வர்த்தகம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இந்த வங்கி ஜனவரி 10-ம் தேதி முதல் அடுத்த 6 மாதத்திற்கு புதிததாக டெபாசிட்டுகளை பெறவோ, பணத்தை மொத்தமாக வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்த எடுக்க அனுமதிக்கவோ கூடாது என உத்தரவு பிறபித்துள்ளது.
இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு 35000 ரூபாய்க்கு மேல் எடுக்க எடுக்க தடை விதித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கடன் வழங்குதல், முதலீடு செய்வது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகள் எதிலும் அடுத்த 6 மாதத்திற்கு ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி ஈடுபடக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதால் முதல் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வங்கியில் முதலீட்டாளர்கள் அதிகஅளவில் கூடி தங்கள் பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.