முகேஷ் அம்பானி 
வணிகம்

அம்பானி குடும்பத்தைச் சாராத நபர் ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக விரைவில் நியமனம்: அன்றாட அலுவல் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராகிறார் முகேஷ் அம்பானி

செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக விரைவிலேயே புதிய நபர் நியமிக்கப்பட உள்ளார். நிறுவனத்தின் அன்றாட அலுவல் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராகிறார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு குடும்ப நபர்கள் அல்லாத வெளிநபர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். ஏப்ரல் 1-ம்தேதி புதிய நிர்வாக இயக்குநர் பொறுப்பேற்பார் என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி-க்கு அனுப்பிய கடிதத்தில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு முகேஷ் அம்பானியின் வலது கரமாக திகழும் நிகில் மேஸ்வானி அல்லது தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள மனோஜ் மோடி ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஏற்கெனவே செயல் இயக்குநர்களாக உள்ள நிகிலின் இளைய சகோதரர் ஹிதல் மற்றும் பிஎம்எஸ் பிரசாத் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

செபி உத்தரவு

ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் 1990-ம் ஆண்டிலிருந்து மேஸ்வானி இடம்பெற்றுள்ளார். இவர் முகேஷ் அம்பானியின் நெருங்கிய உறவினர். இவரது தந்தை ரசிக்லால் மேஸ்வானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை திருபாய் அம்பானி தொடங்கிய காலத்தில் நிறுவன இயக்குநராக இருந்துள்ளார்.

இயக்குநர் குழுவில் மனோஜ் மோடி இடம்பெறவில்லை. இருப்பினும் ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கியவர்களின் வாரிசுகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகள் தனித்தனி நபர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மூன்று பதவிகளையும் ரத்தம் சம்பந்தமான உறவினர்களே வகிக்கக் கூடாது என்றும் நிறுவன சட்டம் 1956 வரையறுத்துள்ளது. அந்த வகையில் மேஸ்வானி நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

தற்போது இயக்குநர் பட்டியலில் முகேஷ், நீட்டா அம்பானி ஆகியோருக்கு அடுத்த இடத்தில்ஹிதல் மேஸ்வானி பெயர்தான் இடம்பெற்றுள்ளது. 1995-ம்ஆண்டிலிருந்து செயல் இயக்குநராக பொறுப்பு வகிக்கும் இவர் நிறுவன வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். ஹஸிராவில் சர்வதேச தரத்திலான பெட்ரோ ரசாயன வளாக உருவாக்கம், பிரம்மாண்டமாக ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகம் விரிவாக்கம் உள்ளிட்டவற்றில் இவரது பங்கு அபரிமிதமானது. இது தவிர நிறுவன விவகாரம், வரி விதிப்பு, மனித வளம், ஐபிஎல் கிரிக்கெட் அணி உள்ளிட்டவற்றிலும் இவரது ஈடுபாடு அதிகம்.

முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பராக நீண்டகாலமாக விளங்குகிறார் மனோஜ் மோடி. மிக முக்கியமான திட்டப் பணிகளை முகேஷ் அம்பானிக்குப் பதிலாக இவரே செயல்படுத்தியுள்ளார். அதேபோல பல புதிய திட்டப் பணிகளை ரிலையன்ஸுக்கு கொண்டு வந்ததில் இவருக்கு முக்கியப் பங்குஉண்டு. மும்பை ஐஐடி-யில் ரசாயனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். ரிலையன்ஸ் குழும வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும்அதிகம். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். ரிலையன்ஸ் இன்ஃபோகாம் உருவாக்கத்துக்கு இவர் முக்கிய காரணமாவார்.

முழு நேர இயக்குநராக உள்ளார்பிரசார். 2009-ம் ஆண்டு முதல் குழுமத்தில் உள்ளார். பெட்ரோ கெமிக்கல்ஸ், பைபர் மற்றும் சுத்திகரிப்பு உள்ளிட்ட தொழில்களில் சிறந்த அனுபவம் மிக்கவர்.

SCROLL FOR NEXT