ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அஷ்வணி லொஹாணி நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கு முன் தலைவராக இருந்த ரோகித் நந்தனின் பதவிக்காலம் இம்மாதம் 21-ம் தேதியுடன் முடிவதை ஒட்டி இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் பணியாளர் நியமன குழு இவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டதாகவும், இதுகுறித்த தகவல் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய பொறுப்பில் இவர் மூன்று ஆண்டுகாலம் இருப்பார்.
1980 ம் ஆண்டு (ஐஆர்எஸ்எம்இ) பிரிவைச் சேர்ந்த அதிகாரி. இந்தியன் ரயில்வேயில் மெக்கானிக்கல் இன்ஜினீயராக பணியைத் தொடங்கியவர். தற்போது மத்திய பிரதேச சுற்றுலாத்துறையின் நிர்வாக இயக்குநராக வெளிப் பணி அலுவல் நியமன பொறுப்பு அதிகாரி (ஓஎஸ்டி) வகித்து வருகிறார்.
இந்திய உள்நாட்டு விமான சேவையில் ஏர் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த சில வருடங்களாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மேலும் அதிக கட்டணம் என்கிற விமர்சனமும் ஏர் இந்தியா மீது உள்ளது. கடந்த மாதத்தில் நிதியமைச்சகம் கூடுதலாக ரூ.800 கோடியை இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கியது. இந்த வருடம் மத்திய பட்ஜெட்டில் ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கைபடி 2014-15 ஆண்டில் இந்த நிறுவனம் ரூ. 5,547 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.