வணிகம்

சீன பங்குச் சந்தை தொடர் சரிவு: சரிவில் இருந்து சிறிதளவு மீண்டது இந்திய சந்தை

செய்திப்பிரிவு

சீன பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டவது நாளாக சரிந்தது. திங்கள் கிழமை 8.49 சதவீதம் சரிந்த சீன பங்குச்சந்தை நேற்று 7 சதவீதம் சரிந்தது. பங்குச்சந்தை குறியீடான ஷாங்காய் காம்போசிட் குறியீடு 3000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிந்தது. பல வருடங்களாக சீன பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இருக்கிறது. எதிர்காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி இருக்காது என்பதால் பங்குச்சந்தை தொடர்ந்து சரிய ஆரம்பித்திருக்கிறது.

சீன பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களில் 80 சதவீதம் வரை சிறுமுதலீட்டாளர்கள்தான். இந்த சரிவால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் முதல் சீனப் பங்குச்சந்தை பெரிதும் சரிந்து வருகிறது.

சீனா வட்டி குறைப்பு

சீனா மத்திய வங்கி நேற்று வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் கடன் வாங்குவதற்குமான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறையும். இந்த வட்டி குறைப்பு ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தவிர வங்கிகள் வைத்திருக்கும் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (ஆர்.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்திருக்கின்றன. சீனப் பங்குச் சந்தைகள் தொடர் சரிவினைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கையை சீன மத்திய வங்கி எடுத்திருக்கிறது. இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சீன பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கிறது, இந்த வட்டி குறைப்புகள் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த உதவும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி யுவானின் மதிப்பினை 2 சதவீதம் வரை குறைத்தது.

இப்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.60 சதவீதமாகவும், டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 1.75 சதவீதமாகவும் இருக்கின்றன.

சென்செக்ஸ் 291 புள்ளி உயர்வு

திங்கள் கிழமை ஆறு சதவீதம் வரை சரிந்த இந்திய பங்குச்சந்தை கள் நேற்று 1 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிந்தது. சர்வதேச கரன் ஸிகளில் உள்ள நிலைத்தன்மை மற்றும் சர்வதேச சந்தையில் உள்ள வாங்கும் போக்கு ஆகிய காரணங் களால் பங்குச்சந்தை உயர்ந்தது. தவிர, சரக்கு மற்றும் சேவை வரியை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததன் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்ந்து 26032 புள்ளியிலும், நிப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 7881 புள்ளியிலும் முடிந்தது. மிட்கேப் குறியீடு 2 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவீதமும் உயர்ந்து முடிந்தது.

ரியால்டி குறியீடு 7 சதவீதம் வரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், ஆட்டோ, வங்கி ஹெல்த்கேர் ஆகிய துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. ஐடி குறியீடு 0.50 சதவீதம் சரிந்து முடிந்தது.

ரூபாய் மதிப்பு உயர்வு

இரு வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு நேற்று 54 பைசா உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 77 பைசா வரை ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. கடந்த இரு வருடங்களில் ஒரே நாளில் அதிகபட்சம் உயர்வது இப்போதுதான். வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.10 ரூபாயில் முடிவடைந்தது.

பங்குச்சந்தை சரிவால் வெளி நாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வருவது, தேவைப்பட்டால் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அந்நிய செலாவணியை பயன்படுத்துவோம் என்று ரகுராம் ராஜன் கூறியது, சீனா வட்டி விகிதத்தை குறைத்தது ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு உயர்ந்து முடிந்தது.

SCROLL FOR NEXT