ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல், வர்த்தக ரீதியாக இந்தியாவை பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தயாராகி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் பெரும்பகுதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே பெறப்படு கிறது. இந்நிலையில் ஈரான் மீதான தாக்கு தலால் உலகளாவிய அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் விலை 72 டாலரைத் தொட்டுள்ளது.
இந்தியா, அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்கிறது. குறிப்பாக இராக்கிடமிருந்தே அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இந்தியா, 2018-19 நிதி ஆண்டில் 207.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய் தது. அதில் 46.61 மில்லியன் டன் இராக் கிடமிருந்து வாங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே போர்ச் சூழல் வலுப்பெற்று வருவதால் இந்தியாவுக்கான எண்ணெய்த் தேவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், ‘எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது. தற்போதைய நிலையில் எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை’ என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.