மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பரிந்துரைகளை அளிக்குமாறு பிரதமர் மோடி கோரியுள்ளார்.
வரும் நிதியாண்டான 2020-21-க்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இறங்கியுள்ளார். இந்த நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பரிந்துரைகளை அளிக்குமாறு பிரதமர் மோடியும் கோரியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும், நாட்டின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி MyGov இணையதளத்தில் மக்கள் தங்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கூறலாம். உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
அத்துடன் MyGovIndia இணையதளத்தில் பட்ஜெட் தொடர்பாக வெளியிடபட்டுள்ள தகவல்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில், மத்திய பட்ஜெட் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பெறும் பணியில் மத்திய நிதியமைச்சகமும் இறங்கி உள்ளது. குறிப்பாக விவசாயம் மற்றும் கல்வித்துறை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றிய உங்களின் கருத்துக்களை httpshttps://www.mygov.in/group-issue/inviting-ideas-and-suggestions-union-budget-2020-2021/ என்ற முகவரியில் தெரிவிக்கலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.