பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களும் தங்களின் நிதிநிலை அறிக்கையை காலாண்டுகளுக்கு அல்லது அரையாண்டுகளுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்காக நிறுவனச் சட்ட விதியில் திருத்தம் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள், செபியின் விதிமுறையின் கீழ் நிதி ஆண்டின் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதன் நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும். ஆனால் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் தங்கள் நிதிநிலையை மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டிய அவசியமில்லை.
இந்நிலையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களும் இனி தங்கள் நிதிநிலையை மூன்று அல்லது ஆறு மாத கால இடைவெளியில் அறிவிக்கும் வகையில் நிறுவன விதியில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டியலிடப்படாத நிறுவனங்கள் உள்ளன.