அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் பதற்றச் சூழல் காரணமாக, ஈரான் உடனான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க அரசு, ஈரானின் முக்கிய தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமானியை ஏவுகனை தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றச் சூழல் அதிகரித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினமே உலகளாவிய பொருளாதார சந்தையில் மாற்றம் ஏற்பட்டது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்தே பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், கச்சா எண்ணெய் மதிப்பு அன்றைய தினம் 4 சதவீதம் அளவில் உயர்வைக் கண்டது. அதேபோல் தங்கத்தின் மதிப்பும் சவரனுக்கு ரூ.632 அதிகரித்தது.
இந்நிலையில் ‘அவ்விரு நாடுகளுக்கிடையேயான மோதல் தொடரும் பட்சத்தில், அது ஈரான் உடனான இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும்’ என்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார். இந்தியா-ஈரான் இடையே ஆரோக்கியமான வர்த்தக உறவு நிலவி வருகிறது. கச்சா எண்ணெய், உரங்கள், வேதியியல் பொருட்கள் போன்றவற்றை ஈரான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதேபோல் தேயிலை, காஃபி, பாஸ்மதி அரிசி, மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது.
தற்போதைய ஓப்பந்தத்தின்படி, ஈரான் அதன் சார்பிலேயே இந்தியாவிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் அதிகரிக்கும்பட்சத்தில் ஈரானின் இறக்குமதி நடவடிக்கைப் பாதிக்கப்படும், இந்தியா பாரசீக வளைகுடா பகுதிகளுக்கு 2018-19-ம் ஆண்டில் ரூ.24,920 கோடி மதிப்பில் ஏற்றுமதிகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல் ரூ.96,000 கோடிமதிப்பில் இறக்குமதிகளை செய்துள்ளது. எண்ணெய் இறக்குமதி காரணமாகவே பாரசீக வளைகுடாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி விகிதாச்சாரம் சமநிலையற்று உள்ளது. தற்போது இந்தியா மற்றும் ஈரான் இடையே இருதரப்பு விருப்ப வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தாராளாவாத வர்த்தக ஒப்பந்தத்துக்கும் விருப்ப வர்த்தக ஒப்பந்தத்துக்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால் தாராளவாத வர்த்தக ஒப்பந்தத்தில் பெருவாரிய பொருட்கள் மீதான வரி நீக்கப்படும். ஆனால் விருப்ப வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் வரிச்சலுகை அளிக்கப்படும். அந்த வகையில் இருநாடுகளும் விருப்பவர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.