வணிகம்

ஈரான் போர் பதற்றம்; தங்கம் விலை புதிய உச்சம்: இன்றைய நிலவரம் என்ன?

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. உலக அளவில் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் முக்கிய பங்கு வகிக் கின்றன. இந்த இரு நாடுகளில் ஏற்படும் சாதக, பாதக சூழல்கள், பொருளாதார நெருக்கடி போன்றவையே உலக அளவில் தங்கம் விலையை நிர்ணயிக்கின்றன.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித் துள்ளதால், தங்கம் விலையில் திடீர் உயர்வு காணப்பட்டது.

தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று (ஜனவரி 6-ம் தேதி) கடுமையாக உயர்ந்து, புதிய உச்சமாக சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் தங்கம் - வெள்ளி சந்தையில் காலை நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கும், பவுன் ரூ.512 உயர்ந்து ரூ.31,168க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32704க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT