வணிகம்

நிறுவன வரியை குறைப்பதால் எந்தப் பலனும் இல்லை; பணப்புழக்கம் அதிகரிக்காமல் எதுவும் மாறாது: பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி கருத்து

செய்திப்பிரிவு

‘நிறுவன வரியை குறைப்பதால் எந்த பலனும் இல்லை. நிறுவனங்களிடம் போதிய பணம் உள்ளன. ஆனால் அவை முதலீடு செய்வதில்லை. தற்போதைய சூழலில் தேவையை உருவாக்குவதே அவசியம். எனில் மக்களிடம் பணம் புழங்கச் செய்ய வேண்டும்' என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்க உள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை சரிசெய்யும் பொருட்டு மத்திய அரசு நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. இந்நிலையில் நிறுவன வரியை குறைப்பதில் எந்தப் பலனும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மக்களிடம் நுகர்வு குறைந்து இருப்பதே தற்போதைய பிரச்சினை.

மக்களிடம் போதியப் பணப்புழக்கமும் இல்லை. அவர்களிடம் பணப்புழக்கம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள். எனில், அவர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதே தற்போதைய சூழலில் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். நிறுவனங்களிடம் பணம் இல்லாமல் இல்லை. ஆனால் அவை முதலீடு செய்வதில்லை.

எனவே, நிறுவன வரியை குறைத்தது சரியான தீர்வு அல்ல. ஏனென்றால் மக்களிடம் வாங்கும் திறன் அதிகரிக்கும்பட்சத்தில் நிறுவனங்கள் தானாகவே முதலீடுகளை மேற்கொள்ளும். மக்களிடம் பணப் புழக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களின் நுகர்வு திறன் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. விளைவாக நிறுவனங்களின் உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி தொடர்ந்து நான்கு மாதங்களாக (-) எதிர் நிலையில் உள்ளது. இந்நிலையில் நிறுவன வரியை குறைப்பதைக் காட்டிலும் மக்களின் நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அரசு அதன் மக்களை தன்மானத்தோடு வாழ வழி செய்ய வேண்டும். அது அரசின் அடிப்படையான தார்மீகக் கடமை. பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களை தோல்வி அடைந்தவர்களாக பார்ப்பது சரியான அனுகுமுறை இல்லை. ஏழைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்தால் சில ஆண்டுகளிலே அவர்கள் தாங்களாகவே மேலெழுவார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT