நடப்பு நிதி ஆண்டு முடிய ஜனவரியோடு சேர்த்து இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், வரி வருவாய் இலக்கை அடைய மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் வரி வருவாய் இலக்கை அடையும் வகையில் வரி வசூலிப்பாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே வலியுறுத்தியுள்ளார்.
வரி வருவாய் தொடர்பாக நேற்று முன்தினம் அஜய் பூஷன் பாண்டே தலைமையில் வரித் துறை தொடர்பான உயர் அதிகாரிகள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில் மத்திய மறைமுக மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர், உயர் அதிகாரிகள், மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில், வரி மோசடியை தடுக்கும் வகையிலும், வரி வருவாயை அதிகரிக்கும் வகையிலும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசு ஜனவரி, பிப்ரவரி இரு மாதங்களில் தலா ரூ.1.10 லட்சம் கோடியும், மார்ச் மாதத்தில் ரூ.1.25 லட்சம் கோடியும் ஜிஎஸ்டி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தவிர, நடப்பு நிதி ஆண்டில் மொத்தமாக ரூ.13.35 லட்சம் கோடி நேரடி வரியை வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இந்த இலக்கை அடையும் வகையில் வரித் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். வரி வசூலில் ஈடுபடுபவர்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வரி ஏய்ப்பில் ஈடுபடுவர்களை முறையாக அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.