பிரதிநிதித்துவப் படம். 
வணிகம்

ஜிஎஸ்டி வரி வருவாய்; தொடர்ந்து 2-வது மாதமாக டிசம்பரில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது

பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் தொடர்ந்து 2-வது மாதமாக டிசம்பர் மாதத்திலும் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி ரூ.1.03 லட்சம் கோடியாக இருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.97ஆயிரத்து 276 கோடியாக இருந்த நிலையில், அதைக் காட்டிலும், 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

2019, நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடியாக இருந்தது. இதன்படி டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலான ரூ.1.03 லட்சம் கோடியில், மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.19 ஆயிரத்து 962 கோடி, மாநில ஜிஎஸ்டி வரி ரூ.26 ஆயிரத்து 792 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.48 ஆயிரத்து 99 கோடியாக இருக்கிறது. இதில் இறக்குமதி மூலம் ரூ.21 ஆயிரத்து 295 கோடி கிடைத்துள்ளது.

நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை ஜிஎஸ்டிஆர் 3 'பி' ரிட்டர்ன் ரூ.81.25 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியில் இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய், கடந்த 2018 டிசம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 9-வது முறையாக வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் அதிக அளவு வசூலிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT