அடுத்த 10 ஆண்டுகளில் தரவுஆய்வாளர்கள் (டேட்டா அனலிஸ்ட்), நடத்தைசார் விஞ்ஞானிகள், ஆடை வடிவமைப்பாளர்கள், டிஜிட்டல் உலகுக்கு அடிமையானவர்களை மீட்கும் ஆலோசகர்கள் ஆகியோர்களுக்கான தேவை அதிக அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை, உற்பத்தி மற்றும் வணிகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அமைப்பான யுகே ராயல் சொசைட்டி வேலைச் சூழல் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், பிரக்ஸிட், பருவநிலை மாற்றம், பொருளாதார மந்தநிலை, நவீன தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை அடுத்த 10 ஆண்டுகளுக்கான வேலை சூழல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக அமையும் என்று கூறியுள்ளது.
பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு என தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்த யுகத்துக்குள் நுழைந்துள்ளது. தானியங்கி வாகனம், 3டி பிரிண்டிங் என நவீன தொழில்நுட்பங்கள் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன.
அடுத்த 10 ஆண்டுகளில்..
இந்நிலையில் இந்த தொழில் நுட்பங்கள் தொடர்பான மென் பொருள் உருவாக்குனர்கள், டிஜிட்டல் மாற்றங்கள் குறித்த தொழில்நுட்ப ஆலோசகர்கள் ஆகியோர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.
தற்போதைய காலகட்டத்தில் முதலீடுகள் சார்ந்து மிகத்துல்லியமான தகவல்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தரவுகள் சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்கள், நடத்தைசார் விஞ்ஞானிகள் ஆகியோருக்கான தேவை அதிகரிக்கும்.
அதேபோல், உணவு கூட்டுறவுதொழிலாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகியோருக்கான தேவை நிலவும் என்று கூறிஉள்ளது.
மனிதனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு குறைந்து மனிதனுக்கும் இயந்திரத்துக்குமான தொடர்பு வலுப்பட்டுள்ளது. இந்தப் போக்குஆபத்தில் முடியும் என்ற நிலையில், மனித உறவு மேம்பாடு சார்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, டிஜிட்டல் உலகத்துக்கு அடிமையானவர்களை மீட்க உதவும் ஆலோகசகர்களுக்கானத் தேவை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.