வேலை உருவாக்குவதில் இந்தி யாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அசோசேம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2012-13-ம் ஆண்டில் வேலை உருவாக்கத்தில் பிற மாநிலங் களைக் காட்டிலும் தமிழகம் முன்னிலை வகித்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.
மொத்தம் 20 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் மைனஸ் நிலைக்கு சரிந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் வேலை உருவாக்கம் 15.2 சதவீத அளவுக்கு இருந்தது.
உற்பத்தித் துறையில் வேலை உருவாக்கம் இரு மாநிலங்களிலும் கணிசமான அளவுக்கு அதிகரித் துள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் உற்பத்தித் துறை மிகச் சிறப்பாக செயலாற்றுவதாகக் குறிப்பிட்ட அறிக்கை, இன்னமும் சில குறிப்பிட்ட பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜவுளித் துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் பிஹார், ஒரிசா மாநிலங்களிலிருந்து ஆட்களை பணியமர்த்தி வருவதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
2011-12-ம் நிதி ஆண்டில் தமிழகத்தில் வேலை உருவாக்கம் 1.2 சதவீதம் அதிகரித்திருந்ததா கவும் அதே காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் வேலை உருவாக்கம் 0.2 சதவீத அளவுக்கு இருந்ததா கவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேலை உருவாக்கம் முறையே 13.8 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக இருந்துள்ளது. உணவு பொருள் சார்ந்த துறை, ஜவுளி, ரசாயனம், ரசாயனம் சார்ந்த பொருள் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி இறங்குமுகமாகவே உள்ளது.
2014-15-ம் ஆண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருந்தது. இருந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்தித்துறையில் சுணக்கமான சூழல் கடந்த சில ஆண்டுகளாக நிலவுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இத்துறையின் பங்களிப்பு இன்னமும் தேக்க நிலையிலேயே இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 2012-13-ம் ஆண்டில் உற்பத்தித் துறையில் 1.29 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டு 1.34 கோடியாக இருந்தது.
சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம், அரசுத் துறை களை ஒருங்கிணைப்பது, மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு உள்ளிட்ட பல வகை நடவடிக்கைகள் மூலம் உற்பத்தித் துறையில் வளர்ச்சி எட்ட முடியும் என அசோசேம் தெரிவித்துள்ளது.
உணவு உற்பத்தித் துறை, ஜவுளி, ரசாயனம், ரசாயன பொருள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் வேலை உருவாக்கம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை என்றும் அசோசேம் தெரிவித்துள்ளது.