வணிகம்

அடுத்த ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இலக்கு 100 ஜிகா வாட்ஸ்

செய்திப்பிரிவு

புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் உருவாக்கத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிற நிலையில், 2020-ம்ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் அளவில் அதற்கான கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 86 ஜிகா வாட்ஸ் அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அதை அடுத்த ஆண்டில் 100 ஜிகா வாட்ஸாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

2022-க்குள் 175 ஜிகா வாட்ஸ் அளவில் புதுப்பிக்கத்தக்க எரிஆற்றலுக்கான கட்டமைப்பை உருவாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன்பகுதியாக அது தொடர்பான கட்டமைப்புகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதேசமயம் அரசு, இவ்வகைஎரிஆற்றல்களை சேமிக்கும் வகையில் சேமிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மரபு வழி எரிபொருளுக்கு மாற்றாக,புதுப்பிக்கதக்க ஆற்றலை பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் வகையில் சேமிப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும். அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களை இதில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியபோது, ‘மரபு எரிஆற்றலுக்குப் பதிலாக புதுப்பிக்கத்தக எரிஆற்றலை உருவாக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் அதற்கான கட்டுமானம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆற்றல் சேமிப்பு கிடங்கு சார்ந்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 2020-க்குள் 100 ஜிகா வாட்ஸ் அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கானகட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

கரியமில வாயு வெளியேற்றம் உலகளாவிய அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், உலக நாடுகள் மாற்று எரிசக்தி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. 2030-ம் ஆண்டில் இந்தியாவில் 55 சதவீதம் அளவில் புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் பயன்பாடு இருக்கும் என்று அவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT