ரமேஷ் சந்த் 
வணிகம்

வரி வருவாயை அதிகரிக்க ஜிஎஸ்டி விகித அடுக்குகள் குறைக்கப்பட வேண்டும்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

செய்திப்பிரிவு

‘மத்திய அரசு அவ்வப்போது ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வருவதற்குப் பதிலாக, தற்போது நான்கு அடுக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி விகிதங்களை இரண்டு அடுக்குகளாக மாற்றலாம்’ என்று நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் வரி வருவாயை அதிகரிப்பது மிக அவசியம். மத்திய அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி அடுக்குகளை இரண்டாக குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியா முழுவதுக்கும் ஒரே வரியாக ஜிஎஸ்டி 2017-ம் ஆண்டுஜுலை மாதம் நடை முறைப்படுத்தப்பட்டது. அதன்படி 5% ,12%, 18%, 28% என்ற 4 அடுக்குகளாக ஜிஎஸ்டி வகுக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளே ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளில்தான் ஜிஎஸ்டியை வகுத்துள்ளன.

ஆனால், இந்தியா அதிக அளவாக 4 அடுக்குகளாக ஜிஎஸ்டியை வகுத்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு மக்களும், தொழில் நிறுவனத்தினரும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதிக வரியினால் மக்கள் தங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளனர். நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு முறையும், நிறுவனங்கள் அதன்தயாரிப்பு சார்ந்தவற்றின் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றன.

இதுகுறித்து ரமேஷ் சந்த் கூறுகையில், ‘ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்திய நாடுகள் அனைத்தும் ஆரம்ப கட்டத்தில் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. ஆனால் சில ஆண்டுகளில் அப்பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன. இந்தியாவிலும் அவ்வாறே நிகழும். சில ஆண்டுகளில் ஜிஎஸ்டி தொடர்பான சிக்கல்கள் சரியாகும். ஆனால்அதேசமயம், இந்தியா தற்போதுஜிஎஸ்டி தொடர்பாக வகுத்துள்ள 4 அடுக்குகளை 2 அடுக்குகளாக குறைக்க வேண்டும். அப்போதுதான் வரி வருவாய் உயரும்’ என்றுகூறினார்.

அவர் மேலும் கூறிகையில், ‘நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. பலமுறை அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டுக்கு இப்போது வரி வருவாய் அவசியம். வரியை குறைக்க வேண்டும் என்றுவேண்டுகோள் விடுக்கும் நிறுவனங்கள் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வரி வருவாய் மூலமே வளர்ச்சி திட்டங்களை அரசு மேற்கொள்ள முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

‘அரசு வரி வருவாயை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் ஒவ்வொருமுறையும் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் கொண்டுவருவதற்குப் பதிலாக அதன் ஜிஎஸ்டி அடுக்குகளை குறைப்பதே சிறந்த முடிவாக இருக்கும்’ என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT