சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புபணம் பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரத்தை ரகசிய தன்மைகாரணமாக வெளியிட முடியாதுஎன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை சுவிஸ் அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த விவரங்களை வெளியிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ மனுவுக்கு நிதி அமைச்சகம் பதில் தர இயலாது என தெரிவித்துள்ளது.
இந்தியா, சுவிட்சர்லாந்து நாடுகளிடையே வரி சார்ந்த ஒப்பந்தத்தின்கீழ் தகவல்களை பரிமாறிக் கொள்ள வழியேற்பட்டுள்ளது. இதன்படி அந்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை சுவிஸ் அரசு அளித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 8 (1)-ன் கீழ் நாட்டின்இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, உத்திசார் அடிப்படையிலான அணுகுமுறை, அறிவியல் சார்ந்த,பொருளாதாரம் சார்ந்த மற்றும்வெளியுறவு சார்ந்த விஷயங்களாயிருப்பின் தகவல்களை தர வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பிற பிரிவுகளில் வெளிநாட்டு அரசிடமிருந்து பெறப்படும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது. அந்தவகையில் சுவிட்சர்லாந்து அரசிடமிருந்து இந்தியர்கள் வைத்துள்ள கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு கோரப்பட்டது. குறிப்பாக கருப்பு பண விவரங்கள் தொடர்பாக இந்தியாவுடன் சுவிஸ்அரசு பகிர்ந்துகொண்ட விவரங்களை வெளியிடுமாறு கோரப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் சுவிஸ்வங்கிகள் முதல் தவணையாக வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் விவர பட்டியலை தகவல் பரிமாற்ற ஒப்பந்த விதியின்கீழ் அளித்தது. இத்தகைய ஒப்பந்தத்தை இந்தியா உட்பட 75 நாடுகள் சுவிஸ் அரசுடன் மேற்கொண்டுள்ளன.
கருப்பு பணம் தொடர்பாக என்சிஏஇஆர் அமைப்பு 2011-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 1980-ம் ஆண்டு முதல் 2010 வரையான காலத்தில் 38,400 கோடி டாலர் முதல் 49,000 கோடி டாலர் வரையிலான தொகை சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருந்தது.
இதேபோல என்ஐஎஃப்எம் என்றமற்றொரு அமைப்பு நடத்திய ஆய்வில் 1990 முதல் 2008 வரையான காலத்தில் ரூ. 9.41 லட்சம்கோடி கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருந்தது. அதாவது சராசரி வருவாயில் 10 சதவீத அளவுக்கு கருப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
1997-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.2 சதவீதம் முதல் 7.4 சதவீத தொகை கருப்புப் பணமாக பதுக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.