வணிகம்

நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிகளின் வாராக் கடன் நிலை மேம்படும்: எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் உறுதி

செய்திப்பிரிவு

‘வங்கிகள் எதிர்கொண்டுள்ள வாராக் கடன் சூழல் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் மேம்படும்’ என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்தார். தொழில் வர்த்தக சம்மேளன கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், வங்கிகள் கடன் வழங்குவதில் எவ்வித நிதி தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும் பணப்புழக்கம் தாராளமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

கட்டமைப்பு, நுகர்வோர் உள்ளிட்ட துறைகளில் கடன் வழங்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், நுகர்வோர் தேவையில் எவ்வித வீழ்ச்சியும் காணப்படவில்லை என்றார். 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் பெரும்பாலான வங்கிகளின் நிதி நிலை நிச்சயம் மேம்படும் என்று குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கை காரணமாக ஒரு அளவுக்கு மேல் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகளால் குறைக்க முடியாது என்றும், வங்கிகளுக்குள்ள கடன் பொறுப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளே இதற்கு முக்கியக் காரணம் என்றார்.

வங்கிகளில் பணப் புழக்கத்துக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து தங்களுக்கு தேவையான முழு அளவிலான தொகையை கடனாக பெற தயக்கம் காட்டுகின்றன. அதேபோல நிறுவனங்கள் முழுமையான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

தொலைத் தொடர்புத் துறையில் அடுத்த சுற்று அலைக்கற்றை ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தொலைத் தொடர்புநிறுவனங்களுக்கு வங்கிகள் கடன்வழங்குமா என்று கேட்டதற்கு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதானது எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் வழங்கப்படுவதாக உள்ளது. அலைக்கற்றை ஏலத்தை அரசு உரிய முறையில் நடத்துகிறது. ஆனால் உண்ணையிலேயே இதுஎவ்வித உத்திரவாதமும் இல்லாமல் வழங்கப்படும் கடன்.இதற்கு வங்கிகள் கடன் வழங்குவது மிகவும் சிக்கலானதேஎன்றார்.

எனவே வங்கிகள் இனிமேல் அளிக்கும் கடன் திரும்பும் உத்தரவாதம் உள்ள துறைகளுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். தொலைத் தொடர்புத் துறையில் வாராக் கடன் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக ரஜ்னீஷ் குமார் கூறினார்.

SCROLL FOR NEXT