பன்னா முக்தா எண்ணெய் வயல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கேஸ் (பிஜி), தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
பன்னா முக்தா எண்ணெய் வயல் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கேஸ், மத்திய அரசுக்கு தர வேண்டிய பங்கை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில் அந்நிறுவனங்கள் தங்கள் சொத்துகளை விற்பதை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு தர வேண்டிய கடனுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் ரிலையன்ஸ் மற்றும் பிஜி நிறுவனங்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
பன்னா முக்தா எண்ணெய் வயல் மற்றும் தப்தி வாயு நிலையத்தை பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி மும்பையில் 1994-ம்ஆண்டு அமைத்தது. அதைத் தொடர்ந்து தனியார்மயமாக்கலில் ரிலையன்ஸ் மற்றும் அமெரிக்க நிறுவனமான என்ரான் நிறுவனங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு அந்நிலையங்கள் குத்தகைவிடப்பட்டன. அதன்படி, அந்த எண்ணெய் மற்றும் வாயு நிலையத்தில் ஓ.என்.ஜி.சி.-க்கு 40 சதவீதப் பங்குகளும், ரிலையன்ஸுக்கு 30 சதவீதப் பங்குகளும், என்ரான் நிறுவனத்துக்கு 30 சதவீதப் பங்குகளும் ஒதுக்கப்பட்டன. உற்பத்தி மூலம் கிடைக்கும் லாபத்தை அரசுடன் பகிர வேண்டும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 2002-ம் ஆண்டுபிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான பிஜி, இந்தப் ஒப்பந்தத்தில் என்ரானிடமிருந்த 30 சதவீதப் பங்குகளை வாங்கியது. அதன்பிறகு ரிலையன்ஸ், பிரிட்டிஷ் கேஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி மூன்று நிறுவனங்களும் இணைந்து அந்நிலையங்களில் உற்பத்தியைத் தொடர்ந்தன. 2016-ம் ஆண்டு தப்தி வாயு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, அதன் பங்குகள் அனைத்தும் ஓ.என்.ஜி.சி-யிடம் ஒப்படைக்கப்பட்டன. அதே ஆண்டில் பிஜிகுழுமத்தின் பங்குகளை ஷெல்நிறுவனம் வாங்கியது.
சொத்துகளை விற்க தடை
இந்நிலையில் ரிலையன்ஸ் மற்றும் பிஜி நிறுவனம் முறையாக உற்பத்தி லாபத்தை பகிரவில்லை என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 2010-ம் ஆண்டு முதலே அரசு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தது. 4.5 பில்லியன் டாலர் அந்நிறுவனங்கள் அரசுக்கு தர வேண்டியுள்ளது என்றுகடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் அரசு முறையிட்டது. அது தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. ‘ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்கெனவே ரூ.2.88 லட்சம் கோடி கடன் உள்ளது.
அந்தக் கடன்களை அடைப்பதற்காக அதன் சொத்துகளை அந்நிறுவனம் விற்று வருகிறது. எனில் அரசுக்குத் தரவேண்டிய கடனை அடைப்பதற்கு அதனிடம் நிதி இல்லாமல் ஆகிவிட வாய்ப்பு உண்டு.எனவே அந்நிறுவனம் சொத்துகளை விற்பதை தடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதிட்டது. அதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கேஸ் இரண்டு நிறுவனங்களும் தங்கள் சொத்து கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம கேட்டுக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் அதன்கடன்கள் அனைத்தையும் அடைப்பதற்காக அந்நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளை சவுதி ஆராம்கோ நிறுவனத்துக்கு விற்கும் செயல்பாட்டில் உள்ளது. நேற்றோடு பன்னா முக்தா எண்ணெய் வயல் ஒப்பந்தத்தின் 25 ஆண்டுகால குத்தகை முடிவுக்கு வந்தது.